தமிழால் முடியும்!
(வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை (FETNA ) நடத்திய தமிழர் திருநாளில் 2006 விழாக் கவியரங்கில் நான் படித்த கவிதை)
தமிழால் முடியும்
தமிழா நம்பு
தமிழால் முடியும்!
செம்மொழியாம்
நம் மொழியால்
முடியாதெனில் வேறு
எம்மொழியால் முடியும்
எதுவும் இங்கு!
மொழி நிலாக்கள் நடுவே
ஒளிகொடுக்கும்
கதிரவனாய்
உலா வர
நம் தமிழால் முடியும்!
உயிரும் மெய்யும்
ஒன்றரக் கலந்த தமிழால்
நம்மை
உயர்விக்க முடியும்!
காதலைச் சொல்லும்போது கரும்பாகவும்
போரினைச் சுட்டும்போது இரும்பாகவும்
மாற்றிக்கொள்ள
தமிழால் முடியும்!
பிழை கொண்ட பாடலை
எழுதிய இறைவனையும்
எதிர்கொண்ட நக்கீரன் போல
உயிரினும் மேலான நம் மொழி காக்க
உறுதியுடன் போராடும் ஆற்றல் தர
தமிழால் முடியும்!
தன்னுள் தாமிரம் கலந்தாலும்
பொன்னொளி இழக்காத
தங்கம் போல்
பன்மொழி வார்த்தைகள்
பலவும் கலந்தாலும்
உயர்தனிச் செம்மொழியாய்
ஒளி வீச
நம் தமிழால் முடியும்!
துயரமே வாழ்வெனத்
துவண்டிடும் மனிதரையும்
சீரிய நன் நூல்களால்
சிகரத்தில் ஏற்றி வைக்க
நம் தமிழால் முடியும்!
தமிழ் படித்தால்
தமிழில் படித்தால்
உயர்வெனக்கு உலகில் உண்டா?
வினவுகின்ற தமிழர்களே!
வினவுகின்ற தமிழர்களே!
இந்தியத் தலைமகனாய்
வலம் வரும்
அப்துல் கலாம் போல
ஆயிரமாயிரம் தமிழர்களை
அரியணை ஏற்றி வைக்க
அன்னைத் தமிழால் முடியும்!
தாய் வீட்டைப் பிரிந்து
தவிக்கும் புதுப்பெண் போல
தமிழகத்தைப் பிரிந்து
அயலகத்தில் வாடும்
அனைவர்க்கும் ஆறுதல் தர
தமிழால் முடியும்!
"மொழிகள் பலவும் அழியும்
காலம் வெகு தொலைவில் இல்லை"
மொழியாளர் பலரின் கணிப்பு இது!
தாய்மொழியாம் தமிழ் காக்க
தன்னுயிர் தரவும்
முன்வரும் தமிழர்
தரணியில் இருக்கும் வரை
வையத்துள் வாழ்வாங்கு வாழ
தமிழால் முடியும்!
உலகின் மறு புறத்திலும்
நமை யெல்லாம்
ஒன்றிணைக்க
யாரால் முடியும்?
நம் தமிழால் முடியும்!
தமிழால் மட்டுமே முடியும்!
- அன்புடன் மு.ஜெயக்குமார்.
தமிழால் முடியும் கவிதை மிக மிக நன்றாக உள்ளது .தமிழ் இலகியப் புலமையும்
பதிலளிநீக்குதமிழ் மீது கொண்ட தீரா க் காதலும், தமிழால் முடியும்என்ற நம்பிக்கையும் வெளிப்படுகிறது . உங்கள் சிந்தனைத் திறனுக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாய்
இந்தக் கவிதை விளங்குகிறது
பேராசிரியர் சுமதி
Dear Madam, please send a WhatsApp message to +15103961727
நீக்குதங்களின் தமிழ்ப்பற்று அறிந்து மகிழ்கின்றேன். பாராட்டுகள்.
பதிலளிநீக்குGood
பதிலளிநீக்குGood
பதிலளிநீக்கு