நிசம்தானா ஆண்டவனே!


நிசம்தானா ஆண்டவனே!


( நெஞ்சைப் பிளக்கும் கும்பகோணம் தீ விபத்தின் கொடூரம் என் மனதைக் குலுக்கியதில் கண்ணீர்ச் சிதறல்களோடு  வந்து விழுந்த வார்த்தைகள். நிலாச்சாரல் http://www.nilacharal.com/  இணையப் பக்கத்தில் வெளியான கவிதை. )
 

மழலைச் செல்வங்கள்
நெருப்பில் கரையும்போது
ஈரமில்லா மழையே
எங்கு சென்றாய் நீ?

வாழ்க்கை உயர
வழி காட்டும் ஆசிரியர்களே!
வாழ்க்கையே தொலையும்போது
எதைத் தேடிச் சென்றீர்கள்?

ஆண்டுக்கு ஒருமுறையாவது
ஆய்விற்குச் சென்றிருப்பீர்கள்
அலுவலர்களே!
அந்த ஓலைக் கூரையும் 
ஒடுக்குப் படிகளும் 
உங்கள் கண்ணில் படவில்லையா?

அது பள்ளியே இல்லையென்று 
பலமாய்க் குரலெழுப்பும் 
எங்கள் பாதுகாவலர்களே !

இதோ பாடம் படித்து விட்டீர்கள்!
எதிர்கால இந்தியாவை
இனியாவது காப்பீர்களா?

தூணிலும் இருப்பாய் 
துரும்பிலும் இருப்பாய்
நெருப்பில் மட்டும் நீ இல்லை!
நிசம்தானா ஆண்டவனே?

           - கண்ணீருடன் மு.ஜெயக்குமார்.  


1 கருத்து:

  1. கும்பகோணம் நிகழ்வு பற்றிய கவிதை உருக்கமாக உள்ளது. உங்கள் உணர்வின் ஆழத்தைக் காட்டியது.

    பேராசிரியர் சுமதி.

    பதிலளிநீக்கு