தை மகள் வந்தாள்!

தை மகள் வந்தாள்!
(வளைகுடாப் பகுதித் தமிழ் மன்றம் நடத்திய (2010 ) பொங்கல் விழாக் கவியரங்கில் நான் பாடிய கவிதை)


தை மகளே !
தமிழுக்கு முதல் மகளே!
இவ்வையகமே
எழுச்சி பெரும் நீ
வந்துதிக்கும் திரு நாளில்!

"வயக்காடே உலகமென"
வாழ்ந்து வரும் உழவர் கூட்டம்
வான் முகிலைக் கண்டுவிட்ட
மயில்கள் போலத்
துள்ளி எழும்!

இப்புவிதனிலே திருவிழாக்கள்
எது வரினும்
"பொங்கலோ பொங்கலென்று"
சொல்லும்பொது
நறுந்தேனில் நனைத்தெடுத்த
முக்கனியின் சுவையொன்று
நாவினிலேத்
தானாய் ஊறும்!

அதிகாலைத் துயிலெந்து
பகலவனை அகமகிழ்ந்து
வணங்கிடுவோம்!
ஆமாம்!
அவனின்றி
அகிலத்தில் உயிர்கள் ஏது?

மஞ்சலோடு மாவிலையும் வெற்றிலையும்
மலர்க்கொத்தும்
அலங்கரித்துப்
புத்தம் புது மண்பானைப்
பொங்கல் செய்தே
பூமித்தாய் அவளுக்கும்
நன்றி சொன்னோம்!

ஏரிழுத்த களைப்புக் கூட
நீங்கும் முன்பே
பரம்படித்து நிலமதையும்
பக்குவம் செய்யும்
உழவனுக்கு உற்றதோழன்
எருதுகட்கும் நன்றி சொல்ல
"மாட்டுப் பொங்கல்"
கொண்டாடி
மனமுவந்தோம்!

உறவுகளின் அன்பினைத்தான் பரிமாற
"கானும் பொங்கல்"
நாமும் கண்டு
களிப்புற்றோம்!
கவலையின்றி அந்நாளைக்
கழித்திட்டோம்!

"உழந்த்தும் உழவே தலை"
பொய்யாமொழிப் புலவன்
பொழிந்த நல் முத்து இது!
அவ்வுழவின் தலை மகனை
அவன் நிழல்கூட மதிப்பதில்லை!

ஒட்டிய கன்னம்!
ஒல்லியான தேகம்!
வற்றிய வயிரு!
கட்டிய வேட்டிக்கு
மாற்றின்றி தவிக்கும்
கடை நிலை ஊழியன்
கழனிவாழ் உழவன் அவன்
கண்ணீரை மறந்திட்டோம்!

வெயிலெழும்பும் முன்னாலே
துயிலெழுந்து செல்வானே!
வியர்வைக்கும்
அர்த்தம் உண்டென்று
விளைச்சல் மூலம் சொல்வானே!

கட்டாந்தரைப் பூமிக்கும்
பச்சைக் கம்பளந்தான்
விரிப்பானே!

வெள்ளந்தி மனிதனவன்
விளை நிலங்கள் எல்லாமே
கல்லாலும் சிமிண்ட்டாலும்
நாம் நிரப்பி
அவன் கனவிற்குச்
சமாதி கட்டி விட்டோம்!

நெல்மனிகள் தந்து நம்மை
நித்தம் காக்கும் வயலும்!
வயல் சார்ந்த இடமும்
நம்  வாழ்வின் உயிர் நாடி!


இதனை அழித்து விட்டு
இனி எவனிடம்
அரிசி கேட்போம்?

தாமதம் ஏதுமின்றி இன்றி
தங்கச் சுரங்கமதை
பாது காப்போம்!

இதைனைச் செய்தால் தான்
தை மகள் இனிதே
நலம் பெறுவாள் !
இலையேல் அவள் நம்மை
இகழாமல் என் செய்வாள்?

உழவைப் பாது காப்போம்
உழவனைத் தேரில் வைப்போம்!
பொங்கல் திருநாளைப்
பொற்றிப் புகழ்ந்திடுவோம்!  

வாய்புக்கு மிக்க நன்றி!

அன்புடன்,
மு.ஜெயக்குமார்.

1 கருத்து:

  1. பொங்கல் திருநாளின் மகிழ்ச்சி மிக அழகாக சித்தரிகப்படுளது . மிக நன்றாக உள்ளது .

    பேராசிரியர் சுமதி.

    பதிலளிநீக்கு